அதை அதுவாக 14

உள்ளது உணர்ந்தபடி
(தேர்ந்த குறள்கள்) 14

‘தகுந்த மகிழ்ச்சியே எனினும் அளவாகத் திளைக்கவேண்டும்.’

- தேவகாந்தன் -


(37)

அரிய கற்று ஆசற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.
(பொருள், அரசு, தெரிந்துதெளிதல் 3) குறள் 503


அரிய நூல்களைத் தெளிவாகக் கற்றவரிடத்திலும்கூட நன்கு கவனித்தால் சிறிது அறியாமை இருப்பது தெரியவரும்.


அவர்கள் அரிய நூல்களைக் கற்றவர்கள். அவற்றையும் நன்கு கற்றவர்கள். அப்படியானவர்களிடத்தில்கூட அரிதாகவேனும் சிறிது அறியாமை இருக்கவே செய்கிறது. எந்த மனிதரை எடுத்துக்கொண்டாலும் இந்த வரையறைக்குள் அடங்கியவராகவே இருப்பர்.

இதை வேறொரு கோணத்தில் விளக்குகிறது அடுத்த குறள். ‘குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல்’ என்பது அது.

ஒருவரின் குணத்தையும் குற்றத்தையும் தெரிந்து அவற்றுள் எது மிகையாக உள்ளதோ அவரை அத் தன்மைத்தவராய்த் தேரவேண்டும் அல்லது தள்ளவேண்டும். சொல்லப்போனால் இந்த இரண்டு குறள்களும் ஒரே அர்த்தத்தின் இரண்டு பகுதிகளே.

இன்மை எவரில் இல்லை? அவரவரும் படிக்கும் படிப்பு, பழகும் பண்பு, மனத்தின் வலிமை அளவுக்கு அது அழிந்துகொண்டு வரும். மறைந்துவிடாது முற்றாக.

குற்றமற்ற செயல் புரிவதில் வல்லவன் நள மகாராஜன். அவனே, தன் புறங்கால் நனையாமல் கால்கை கழுவி ஒருநாள் குறைச்செயல் புரிந்தான். சனி தோ~ம் அவனைப் பிடித்த கிராமிய வியப்பு இது.

ஆனாலும் ஒரு வி~யம் உண்மை. எவரும் குற்றங் குறைகளின்றித் தவிர்ந்துவிட முடியாது. செம்பில் களிம்பு இயற்கை. விளக்கிப் பாதுகாப்பதின் மூலமாகவே அதை ஒளிவிடவைக்க முடிகிறது.

மனிதர்கள் இதன் இயல்பில் வேறல்லர்.


(38)

இகழ்ச்சியின் கெட்டாரை உள்ளுக தாம்தம்
மகிழ்ச்சியில் மைந்துறும் போழ்து.
(பொருள், அரசு, பொச்சாவாமை 9) குறள் 539

தமக்குரியதான மகிழ்ச்சியே என்றாலும், அதில் மூழ்குகிறபோது, அவ்வாறு மூழ்கிக் கடமை மறதியில் கெட்டவரை நினைத்துக்கொள்ளவேண்டும்.

பொச்சாப்பு – மறதி – புகழைக் கொல்லும். மறதியுள்ளவர்க்கு எதுவுமே நன்றாக அமையாது. அதனால் மறதி கூடாதென்கிறான் வள்ளுவன்.

‘அரிய என்று ஆகாத இல்லை…’ (குறள் 537), ‘உள்ளியது எய்தல் எளிது…’ (குறள் 540) என்ற குறள்களில் எதையும் அடைய முடியுமென்ற வைரக் குரலைக் கேட்கிறோம். அதைக்சுட மறதியின் கெடுதியை வற்புறுத்தவே பாவிக்கிற அருமையை இங்கே நினைக்கவேண்டும். அதேவேளை வள்ளுவன் மேலே சொன்ன மறதி இதுவல்லவென்பதையும் கருதவேண்டியிருக்கிறது.

இந்த மறதியானது இயல்பில் வரும் மறதியல்ல. அது அடிக்கடியும் வந்துவிடாது. வள்ளுவன் சுட்டுகிற மறதி உவகை மகிழ்ச்சியிலிருந்து பிறக்கிறது.

அனுபவிக்கத் தகுந்த மகிழ்ச்சியேயெனினும் அதனுள் அளவாகத் திளைக்கவேண்டும். ‘அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல இல்லாகித் தோன்றாக் கெடும்’ என்று சக்தியை அறிதல் பற்றிக் கூறுகிற அதிகாரத்தில் ஒரு குறள் சொல்லும்.

கரும்பு இனிக்கிறதென்று வேரோடு பிடுங்கித் தின்னக்கூடாது என்பதும் இதையே ஒருவகையில் தெரிவிக்கிறதெனலாம்.

அதனால் மகிழ்ச்சியில் மைந்துறும்போது, அவ்வாறு மகிழ்ச்சியில் திளைத்துக் கெட்டவர்களை நினைத்துக்கொள்ள வேண்டும்.

இதுவே வள்ளுவ எச்சரிக்கை.

000

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்