Sunday, March 30, 2008

அதை அதுவாக 10

உள்ளது உணர்ந்தபடி
(தேர்ந்த குறள்கள்) 10

‘இந்த உலகம் இருவேறு தன்மைகளை
உடையதாக இருக்கின்றது.’


- தேவகாந்தன் -


(31)

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினும் தான்முந் துறும்.
(அறம், ஊழியல், ஊழ் 10) குறள் 380

கெட்ட நிலைமைகளை விலக்குவதற்கான மார்க்கம் குதிர்ந்துவரும் வேளையில், அதை முந்திக்கொண்டும் ஆட்சிசெய்ய வருகிற விதியைவிட வலிமையானது ஏதுமில்லை.1


பத்துக் குறள்களுமே ஏறக்குறையச் சமமான முக்கியத்துவம் வாய்ந்ததாக வரும் திருக்குறளின் ஒருசில அதிகாரங்களுள் ‘ஊ’ழும் ஒன்று. மேலே காட்டப்பட்டுள்ள குறளில் விதியின் அளப்பரிய மொய்ம்பு தெரியும்.

காலத்தோடும் ஊரோடும் ஒட்டிச்சென்று நல்லனவெல்லாம் கண்டுணர்ந்து அவற்றை விதிகளாகத் திரட்டித் தொகுத்த நூல்தான் திருக்குறள் எனப்படுகிறது.

ஊழ்கூட முற்றுமுழுதாக அக் காலகட்டத்து சமூகச் சிந்தனைகள் அப்படியே தொகுக்கப்பட்ட அதிகாரமென்றுதான் சொல்லத் தோன்றும். ஆனாலும் கூர்ந்து கவனிக்கிறபோதுதான் பாடல்களிடையே நிற்கும் மௌனங்களும், அர்த்தம் உள் வெடிக்கவெடிக்க நின்றிருக்கும் சொல்களும் வள்ளுவனின் கலக மனநிலையை வெளிக்காட்டும்.

ஊழ் என்பது ‘இயற்கையின் சுழற்சி’ என்றும், ‘வினைச் சுழற்சியே ஊழ்’ என்றும் கூறுவார் தமிழண்ணல். இந்த ஊழை இவ்வதிகாரத்தின் முதற் குறளிலேயே ஆகூழ், போகூழ் (ஆக்குகின்ற ஊழ், போக்குகின்;ற ஊழ்) என்று இரண்டாகப் பிரித்துவிடுகிறான் வள்ளுவன். ஆகலூழ், இழவூழ் என்றும் குறள் அவற்றைக் குறிக்கும். போகூழ், இழவூழ் என்பனவற்றின் அர்த்தத்திலேயே தீயூழ் என்ற சொல்லையும் அது பாவித்திருக்கிறது.2


ஊழ்பற்றி எவர் சொல்லவில்லை? ஆனாலும் சங்கப் புலவர்களுக்கு ஊழ் பெரிதாகப்பட்டிருக்கவில்லை. அக் காலம், விதிபற்றி மிகச் சொற்பமாகவே பேசியிருக்கிறது.

‘விதியே கொடியாய்! விளையாடுதியோ?’ என்பது கம்ப காவியம். வுpதியென்ற சொல்லும் பாவனையாவது அக்காலகட்டத்pலிருந்துதான். அது இலக்கிய வரலாற்றுணர்வுப்படி காவிய காலம் அல்லது சோழர் காலம் எனப்படும்.

சமயம் தமிழர் வாழ்வில் பெருஞ்செல்வாக்குப் பெற்ற காலமாக சங்க காலத்தின் பின்னான தமிழகம் இருந்திருக்;கிறது என்பதை அக் காலகட்டம்பற்றிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

வள்ளுவனைச் சமணனாகச் சிலர் சொல்வர். சமண மதக் கருத்துக்கள் குறளில் அதிகமென்பது அவர்தம் வாதம். சமணமும் பவுத்தமும் அப்போது நிலைபெற்றிருந்த இந்து சமயம் சார்ந்த சமூக நிலைப்பாட்டினுக்கெதிரான கலகக் குரலாயிருந்ததும் இங்கே அவர்தம் கருத்தின் ஆதாரமாய்க் கொள்ளத் தக்கது. அப்படியில்லாவிட்டாலும் பாதகமில்லை. அவ்வேளையிலும் வள்ளுவன் தனித்த குரலுள்ள சித்தனாகவே இருந்திருப்பான் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.3


இந்த உலகம் இருவேறு தன்மைகளை உடைத்ததாக இருக்கின்றதெனக் கூறுகிறது ஊழ் அதிகாரத்தின் நான்காம் குறள். அறிவுடையோனாய் இருப்பதும், பணமுடையோனாய் இருப்பதும் வேறுவேறு வி~யங்கள், பணமுடையோனாய் இருக்க ஒருவகை விதியிருக்கிறது, அறிவுடையோனாயிருக்க இருப்பது வேறு என்பது அக் குறளின் விரிவு.

அக் குறள் இது: ‘இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தௌ;ளிய ராதலும் வேறு’(குறள் 384).

கோடிட்டுவிட்டான் வள்ளுவன், ஒன்று ஒன்றை அணுகாது என. அதற்கான காரணம் என்ன? அதற்கும் அவனே பதில் கூறுகிறான் அடுத்த குறளிலே. எவையெவை தீயனவோ அவையெல்லாம் நல்லனவாகவம், நல்லனவெல்லாம் தீயனவாகவும் இருக்குமாம் செல்வம் செய்தற்கு. ‘நல்லன வெல்லாம் தீயவாம் தீயவும் நல்லவாம் செல்வம் செயற்கு’ என்பதில் இந்த ஒன்றையொன்று அணுகாத் நிலைமையும், இந்த இரு வகைமைகளின் மனநிலைகளும், இயங்கு தனங்கள் செயற்பாடுகளும் தெளிவுறுத்தப்படுகின்றன.4

செல்வத்தைச் சேர் என்று அறத்துப் பாலில் ஒருபோது வற்புறுத்திய வள்ளுவன் இங்கே செல்வத்தைச் சேர்ப்பதனை எள்ளிநகையாடுகிறான். இது ஒருவகை எள்ளல்தான். தீயனவெல்லாம் செய்தே செல்வம் சேர்க்கப்படுகிறதென்பது மகாரசமான எள்ளலும்.

பணத்தைச் சேர்ப்பதையும், அதைச் சேர்த்தவன் உடைமையாளனாய் ஆவதையும் முதலாளியம்தான் ஊக்குவிக்கும். வள்ளுவன் செய்துவிட முடியாது. அதனால் செல்வச் சேர்ப்பு அவனுக்கு உபகாரம்பற்றியது, அறக் கொடைகள் பற்றியதுமட்டுமே. அப்படியே செல்வந்தனாய் வர முடியாதுபோனாலும் கவலையில்லை என்றிரு என்பதே வள்ளுவ உபதேசம். ஒருவன் எவ்வளவுதான் பிரயத்தனம் பண்ணினாலும் செல்வந்தனாகிவிட முடியாது என்கிறான் அவன். ‘வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது’ (குறள் 377) என்பதில் இந்த நிச்சயத்தை விழுத்துகிறான் அவன்.

அதுபோல தனக்கென ஆக வேண்டிய செல்வத்தை வேண்டாமென்றிருந்தாலும் அது போகாது என்பதும் அவன்தான். அந்தக் குறள் இது: ‘பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் சொரியினும் போகா தம’ (குறள் 376). வருகிற காலத்தில் வந்து, போகிற காலத்தில் செல்வம் போகத்தான் செய்யும் என்பது இதன் விளக்கம். ஆகூழ் காலத்தில் ஆகி, போகூழ் காலத்தில் போகும் என்று சுருக்கமாக இக் கருத்ததைப் பதிந்து வைத்துக்கொள்ளலாம்.

ஆகூழ் காலத்தில் எல்லாம் நல்லனவாக அமைந்து அனுபவித்துப் போகிறவர்கள், தீயூழ் காலத்தில் செல்வம் போகிறபோதுமட்டும் புலம்புவதேன்? இவ்வாறு ஒரு குறள் கேட்கிறது. ‘நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன்?’ (குறள் 379).


இவ்வாறெல்லாம் சொல்வதின்மூலம் தீயூழை முகங்கொள்ளும் திண்மையை வள்ளுவன் வற்புறுத்துகிறானென்றே கொள்ளவேண்டும்.

இந்தப் பகுதியிலே நான் சற்று விரித்துரைத்த கருத்துக்கள் யாவும் குறளின் மவுனம் விரிந்த இடங்களிலிருந்து பெறப்பட்டவை. என் பார்வையில் விழுந்தபடிதான்.5

இவ்வளவு தெளிவு ஏற்பட்ட பிறகும் ஒருசில காலத்தின் முன் சில அய்ய அலைகள் என் மனத்திலே அடித்துக்கொண்டிருக்கச் செய்ததை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அப்போது வேறுவேறு தருணங்களில் வாசித்தவோ வாதித்தவோவான கருத்துக்கள் மனத்தில் எழுந்து நர்த்தனம் புரிந்துகொண்டிருந்தன.

திருக்குறளிலுள்ள 1330 குறள்களும் வள்ளுவனால் பாடப்பட்டவைதானா? திருக்குறளின் அதிகார வைப்பு வள்ளுவனால் செய்யப்பட்டதா? திருக்குறளில் இடைச்செருகல்கள் இல்லையா? தம் தம் கருத்துப்படி உரைகாரரால் மாற்றங்கள் புகுத்தப்படவில்லையா? திருக்குறளை ஒரு எண்கணக்கில் வள்ளுவன் பாடிவைத்திருப்பது சாத்தியமா?

இதைப் பாருங்கள். குறளில் வரும் சீர்கள் ஏழு. அறத்துப் பாலில் 34 அதிகாரங்கள். அந்த எண்களைக் கூட்ட வருவதும் ஏழு. பொருட்பாலில் எழுபது அத்தியாயங்கள். அதில் வருவதும் ஏழு. இன்பத்துப் பால் இருபத்தைந்து அதிகாரங்களைக் கொண்டது. அதுவும் கூட்ட ஏழாக வரும். பாயிரம் நான்கு அதிகாரங்களைச் சேர்க்க மொத்தம் 133 அதிகாரங்கள் ஆகும். 133ஐக் கூட்டினாலும் ஏழு. இப்படி ஏழு என்ற எண்ணை வைத்துக்கொண்டு வள்ளுவன் குறளை யாக்கத் துவங்கியிருப்பானா?

எல்லாவற்றையும் ஊழ் வெல்லும் வல்லபம் வாய்ந்தது என்றவன் இன்னோர் இடத்திலே எதையும் முயற்சியினால் அடைந்துவிட முடியும், முயற்சியினளவுக்காவது அடைய முடியும் என்றிருப்பானா? அப்போது அவன் சொன்ன இந்த ஊழின் மொய்ம்பு என்ன ஆகும்?

இக் கேள்விகளில் நிறைந்த நியாயங்களுண்டு.

ஊழ் என்பதனை கெட்டது என்ற அர்த்தத்தில் மட்டும் நாம் பார்த்துக்கொண்டிருந்ததனால் ஏற்பட்ட கோளாறிது என்று இப்போது எனக்குச் சமாதானம் பிறக்கிறது. வள்ளுவனே இச் சந்தேகத்தை மிகத் தெளிவாகவும் சந்தேகத்துக்கிடமின்றியும் தீர்த்துவிட்டிருக்கிறான். அதுதான் ஆகூழ், போகூழ் என்ற வகைப்பாடு. இதுவும் ஒருவகைச் சமாளிப்புத்தான் என மனம் முழுத் தெளிவடைய மறுத்திருந்தாலும், அமைதி காண முடிகிறது. எண்வழியான படைப்பு முயற்சிக்குமட்டும் பதிலுமில்லை, சமாளிப்புமில்லை.

அதை அதுவாகவே அடைதல் என்பதுதான் அதை அதுவாகப் பார்த்தலுக்கான மூலதளம். அந்தத் தளத்தை நாம் இழந்துவிட்டதாகவே எனக்கு எண்ணத் தோன்றுகிறது. இடைச் செருகல்கள், திரிபுபடுத்தல்கள் யாவும்கூட நடந்திருப்பதாகவேதான் நான் கருதுகிறேன். ஆனாலும் திருத்த முடியாத மாற்றங்களாகிவிட்டன அவை.6

‘ஊழிற் பெருவலி யாவுள’ என்ற குறள் இவ்வதிகாரத்தின் கடைசிக் குறள். ஊழ் அதிகாரம் ஊழியலின் ஒரேயொரு அதிகாரம். இவ்வதிகாரம் அறத்துப்பாலின் இறுதியில் வருகிறது.

அடுத்த பால் பொருட்பால். அதன் தேர்வுகளே மேலே வரப்போவன.

000

No comments:

உட்கனல்

நீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...