Sunday, March 30, 2008

அதை அதுவாக 8

உள்ளது உணர்ந்தபடி
(தேர்ந்த குறள்கள்) 8

‘மனிதனின் மரணம் சிறிதுசிறிதாக ஒவ்வொரு
நாளிலும் நேர்ந்துகொண்டிருக்கிறது’

- தேவகாந்தன் -(26)


நாளென ஒன்றுபோல் காட்டி உயிரீரும்
வாளது உணர்வார்ப் பெறின்.
(அறம், துறவு, நிலையாமை 4) குறள் 334


உணர முடிந்தவர்களுக்குத்தான் நாள் என்பது உயிரை உடம்பிலிருந்து மேலும் வெட்டிப் பிரித்துவிடுகிற வாள் என்பது தெரியவரும்.உடம்பையும் உயிரையும் செகுத்துவிடும் செயலையே காலம் செய்துகொண்டிருக்கிறது.

பார்ப்பதற்கு ஒரு நாள் போலத்தான் தெரியும். ஆனால் காலத்தின் தன்மையை உணரக் கூடியவர்களுக்குத்தான் அது உடலிலிருந்து உயிரை ஈர்ந்துவிடுகிற வாளென்பது தெரியமுடியும்.

ஒருநாளைக்கூட மனிதர் வீணாக்கிவிடக்கூடாது. ‘அன்றறிவாம் என்னாது அறம்செய்க’ என வலியுறுத்தியதன் காரணம் இது சுட்டியதே. மரணம் எப்போது வருமென்பதைத்தான் சொல்லமுடியாது. ஆனால் மரணம் நிச்சயம் வரும். இங்கே குறள் வெளிப்படுத்துகிற அம்சம் எதுவெனில், அந்த மரணம் சிறிதுசிறிதாக ஒருவருக்கு ஒவ்வொரு நாளிலும் நேர்ந்துகொண்டிருக்கிறது என்பதுதான்.

0(27)

நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.
(அறம், துறவு, நிலையாமை 5) குறள் 335

மரணம் சம்பவிப்பதற்கு முன்னே நல்ல காரியங்களைச் செய்து முடித்துவிட வேண்டும்.

வாழ்வின் தன்மையையும் நற்செயலுக்கான அவசரத்தையும் வற்புறுத்துகிற குறளாக இதைச் சொல்லலாம். நாக்கை இழுத்துக்கொண்டு பேச முடியாத கணத்தைப் பிரத்தியட்சமாக்கிக்கொண்டும் மரணம் வரலாம். சுகதேகியாக இருக்கும்போதே நல்வினைகளை ஆற்றிவிட வேண்டுமென்ற வற்புறுத்துகை இதன் உள்ளீடு.

நோய் அதிரவருவதே மனித வாழ்வின் இயல்பாயிருக்கிறது. இந்த உலகத்துக்கு ஒரு மகத்துவம் இருக்கிறது தெரியுமோ? நேற்று இருந்தான், இன்று இல்லையாகிப்போனான் என்று சொல்லக்கூடியதாயிருப்பதே அது. ‘நெருநல் உளனொருவன் இன்றில்லை யென்னும் பெருமையுடைத்திவ் வுலகு’ (நிலையாமை 6) என்ற குறள் அதைத்தான் தெரிவிக்கிறது.

இன்னொரு வி~யமும் உண்டு.

நிலைத்து நிற்காத தன்மையுடையது செல்வம், அது கிடைத்தால் செய்யவேண்டிய நற்காரியங்களை விரைந்து செய்துவிடவேண்டும் என்ற பொருளில் நிலையாமையின் 3ஆம் குறள் வரும். செல்வத்தால் செய்யக்கூடிய நற்காரியமாவது யாதெனக் கேட்பின் ஈதலேயெனத் தயங்காமல் வள்ளுவன் பதிலிறுக்கக்கூடும்.

மனத்தில் அறுதியாய் விழுந்திருக்கிற கருத்து எந்தவொரு வி~யத்தைச் சொல்லவரும் போதும் தருணம் பார்த்திருந்ததுபோல் சொல்லாமல்கொள்ளாமல் ஓடிவந்து விழுந்துவிடுமென்பதற்கு வள்ளுவன் இந்த இடத்தில் சாட்சியாகிறான்.

‘நாச்செற்று … விக்குள் மேல்வரா முன்’ என்பதில் மரணத்தில் மனிதனின் பரிதாபகரம் சொல்லப்படுகிறது.

அந்த நயம்தான் மனிதனுக்கான எச்சரிக்கை.
0(28)

ஒருபொழுதும் வாழ்வ தறியார் கருதுப
கோடியும் அல்ல பல
(அறம், துறவு, நிலையாமை 7) குறள் 337


ஒருபொழுதைக்கூட நன்றாக வாழத் தெரியவில்லை, இவர்கள்போய் கோடிக்கும் மேலான எண்ணங்களைக் கருதிக்கொள்கிறார்களே!எவ்வளவு இரங்கற்படக்கூடிய விசயம்!

மனிதனாகப் பிறந்த எவரும் ஒருநாளாவது வாழவேண்டும், இந்த வாழ்க்கையின் சாரத்தை அனுபவிக்கவேண்டும். ஆனால் இவர்களுக்கு ஒருபொழுதைக்கூட வாழத் தெரியாமலிருக்கிறது. இருந்தும் மனத்துள் கோடி எண்ணங்களை மளமளவென வளர்த்துக்கொள்ளமட்டும் செய்துவிடுகிறார்கள்.

மனத்துள் கோடி எண்ணங்களை வளர்த்துக்கொண்டு வாழ்க்கையைக் கனவில் கரைத்துவிடுவதற்குப் பதிலாய், ஒருபொழுதையாவது வாழ்ந்துவிடுதல் சிறந்தது என்பதை நிலையாமை அதிகாரத்தில், துறவறவியலில் வள்ளுவன் கூறுவதுதான் இங்கேயுள்ள ரசம்.
அதிகாரம், இயல் பகுப்பு எல்லாவற்றையும் தாண்டி கருத்துச்சொல்ல வள்ளுவனால்தான் முடியும்.

இந்தக் கலகம் சித்த குணம். வள்ளுவனை முதல் சித்தனாய்க் கருதலாமோ?

வாழ்க்கையை வாழ் என்று இவ்வளவு ஆணித்தரமாய் வேறு தமிழிலக்கியம் சொன்னதாய் நான் அறியவில்லை.

000

No comments:

வாசிப்புக்கு சவாலான பிரதி: சீனிவாசன் நடராசனின் ‘விடம்பன’த்தை முன்வைத்து…-தேவகாந்தன்-

2016 ஆகஸ்டில் காலச்சுவடு பதிப்பக வெளியீடாக வெளிவந்திருக்கும் இந்த நூல்பற்றி எழுதவேண்டுமென்று எந்த எண்ணமும் தோன்றியிருக்கவில...