அதை அதுவாக 11

உள்ளது உணர்ந்தபடி
(தேர்ந்த குறள்கள்) 11


‘படைப்பின் வெளிப்பாட்டு ஊடகம் எதுவாயிருந்தாலும்
அது அறிதலுக்கானது என்ற விவாதத்தை
வள்ளுவன் கிளர்த்துகின்றானா?’

- தேவகாந்தன் -



(32)


கற்றில னாயினும் கேட்க அஃதொருவன்
ஒற்கத்தின் ஊற்றாந் துணை
( பொருட்பால், அரசு இயல், கேள்வி 4 ) குறள் 414



ஒருவன் கல்லாதவனாயினும் கற்றார் பேச்சைக் கேட்கவேண்டும். அது தளர்ச்சி ஏற்படும் காலத்தில் ஊன்றுகோல்போல, பிரச்சினைகள் தோன்றும்போது அவற்றை நீக்குவதற்கான சிந்திப்பின் ஆதாரமாக நின்றிருக்கும்.

0


‘உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும், பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே’ என்றது புறம்.

கற்பது நல்லதேயெனினும் எத்தனை பேரால் அது சாத்தியப்பட்டுவிடுகிறது? கற்காமல் விட்டுவிடுவதற்கு நிறையப் பேருக்கு நிறையக் காரணங்கள் இருக்கின்றன. அவற்றுள் தலையாயது வறுமை.

எக்காரணத்தை முன்னிட்டு ஒருவன் கற்காமல்விட்டாலும், வசதி கிடைக்கும்போதெல்லாம் அறிவோர் வார்த்தைகளைக் கேட்கவேண்டும் என்கிறான் வள்ளுவன்.

கதை சொல்லுதல், புராண உரைப்பு, உரை விளக்கம் கூறுதல் போன்ற மரபுகள் பொதுமன்றுகளிலே, கோவிற் சந்நிதிகளிலே அக் காலத்தில் நிறையவே தமிழ்ப் பரப்பில் இடம்பெற்றிருப்பதாக அறியக் கிடக்கிறது. காரணம் இது சுட்டியானதுதான்.

கற்றலின் எல்லை ‘சாந்துணை’யும் நீண்டுகிடக்கிறது. அதுபோலவே கேட்டலின் எல்லையும்.

கேள்வியறிவு பெற்றவர்கள் ஒருவேளை - ஒருவேளைதான் - தவறாகவே ஒரு வி~யத்தைப் புரிந்துகொண்டிருந்தாலும், முட்டாள்தனமாகப் பேசியோ, நடந்தோ விடமாட்டார்கள். அதனால் ‘கற்றிலனாயினும் கேட்க’. அது ;ஒற்கத்தின் ஊற்றாந் துணை’.


(33)


எண்பொருள வாகச் சொலச்சொல்லித் தான்பிறர்வாய்
நுண்பொருள் காண்ப தறிவு
(பொருள், அரசு, அறிவுடைமை 4) குறள் 424


தான் சொல்லும் சிக்கலான வி~யமும் எளிமையாக இருக்கவேண்டும். பிறர் விளக்கமறச் சொல்லுதலிலுள்ள நுண் பொருளையும் தான் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். அதுவே அறிவு.

0

கல்லாதார் வாயிலிருந்தும், சொலற்கரியார் வாயிலிருந்தும் பல அர்த்தமான வி~யங்கள் வெளிவருதல் கூடும். அவற்றை தான் நுட்பமாகப் புரிந்துகொள்வது முக்கியம். அதுபோல் எத்துணை அரிய கருத்தாயினும் தான் அதை மற்றவர் இலகுவில் புரிந்துகொள்ளும் விதமாகச் சொல்லவேண்டும். இதுவே வள்ளுவ நிலைப்பாடு.

அதனால்தான் எளிமை…எளிமையென்று கூவிக்கொண்டு விருத்தப் பாவினம் வந்து அகவலினதும் வெண்பாவினதும் இறுக்கத்தைத் தளர்த்தி தமிழ்ப் பாடலை மூச்சுவிட வைத்தது. பின்னர் அதுவும் மாறி, பாரதி கையில் அது கிராமியப் பாடல்களின் சந்தமேற்று மேலும் தன்னை இலகுவாக்கிக் கொண்டது.

புரிவித்தலை அறிவின் அம்சமாய்ச் சொன்ன முதற் தமிழிலக்கியம் திருக்குறளாயே இருக்கமுடியும்.

சொல்மூலம், எழுத்தின்மூலம், வர்ணத்தின்மூலம், உளியின்மூலம் வெளிப்பாடு எதன்மூலமாயிருந்தாலும் அது அறிதலுக்கானது என்ற விவாதம் இங்கே எழுகிறதா? அப்படி நான் எண்ணவில்லை. கருத்தின் வெளிப்பாட்டுத் தன்மையையே இங்கு வள்ளுவன் வற்புறுத்தியுள்ளதாய் நான் கருதுகிறேன்.

படைப்பின் மொழி வேறொன்று. திருக்குறளே படைப்பின்மொழியால் ஆக்கப்பட்டதுதானே!

000

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்