Sunday, March 16, 2008

THE MANY SORROWS OF JOSEPHINE.B

பிரான்சின் சில வரலாற்றுப் பக்கங்களை 
காவியமாக்கியிருக்கும் நாவல்  (1)

பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து ஆங்கில நாவலிலக்கியம் வளர்ந்துவந்த பாதை மிக அழகானது. வரலாற்றுப் பின்புலங்களில் பல்வேறு நாவல்கள் தோன்றின. பயணங்கள், ஆய்வுகள், தேடல்கள்மூலம் கண்டடையப்பட்ட புதுமையான கருத்துக்கள் ஆங்கில இலக்கியத்தை உக்கிரத்துடன் நிறைத்தன. இவை ரஷ்ய, பிரெஞ்சு இலக்கியங்களுக்கு இணையாக ஆங்கில நாவலிலக்கியத்தை உயர்த்தி வைத்தன என்றாலும் மிகையில்லை.

இதனடியாக சமகாலத்திலும் வரலாற்றின் இருண்ட பக்கங்களை புனைவின் துணைகொண்டு கண்டுகொள்ளும் முயற்சிகள் பல்வேறு படைப்பாளிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவற்றில் சில அச்சுப் பிரதிகளாய், சில தகவல்கள் தொகுப்புக்களாய் மாறிப்போக, சிலவே காவியங்களாய் நிலைத்துநிற்கின்றன. அவ்வாறான நாவல்களில் வரலாற்றுக் களத்தை ஆதாரமாகக் கொண்டெழுந்து காவியப் பேறடைந்த நாவல்தான் ‘The Many Sorrows of Josephine B.’

(2)

காதல் என்கிற மனமெய் உணர்வு எங்கேயும் எப்போதும்தான் அழகானது. சரித்திரம் அவ்வாறான வியக்கத்தக்க காதல்களைக் கொண்டிருக்கிறது மெய்யாகவே. ஆனாலும் அதன் சாரம், நவீன மனோதத்துவ, தத்துவ ரீதிகளில் அணுகப்படும் நாவல்களினால் பிழிந்தெடுத்து முன்வைக்கப்படுகிறபோது, மனம் வாசகப் பரவசம் கொண்டுவிடுகிறது.

சங்க காலப் பாடல்கள் தமிழன் இயற்கைவழியில் வாழ்ந்த இயல்பை அகம், புறம் என்ற இருநிலைகளில் வைத்துப் பேசுகிறது. அகம் புறமென்ற இந்த இருநிலை வாழ்வு திணையளாவி தமிழிலக்கியத்தின் ஒப்பற்ற தன்மையையும் உலகிற்குப் பறைசாற்றுகிறது. அகம் சொல்லும், ‘யாயும் ஞாயும் யாங்காகியரோ, எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர், நானும் நீயும் எவ்வழி அறிதும்… செம்புலப் பெயல்நீர்போல அன்புடை நெஞ்சம் தான்கலந்தனவே’ என்ற பாடலும், புறம் சொல்லும், 'யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற பாடலும் தமிழர்கள் தம் வாழ்வில் கண்டெடுத்த அரும் பண்புகள்.

சமகால தமிழ் நாவலிலக்கியத்தில் இவற்றைக் காவியமாக்கும் முயற்சிகள் பரவலாக நடைபெற்றது மெய். இவை ஒரு கனவுப் புலத்திலிருந்து படைப்பாகின. ஆனால், ஆங்கிலத்தில் ஒரு தேடலிலும், ஓர் ஆய்வு வெளியிலுமிருந்து முளைத்தெழுந்தன.

மாமேதைகளின், சரித்திர புருஷர்களின் பல்வேறு  காதல்களைப் பற்றியும் ஆங்கில வரலாறு பேசுகிறது. கார்ல் மார்க்ஸ், நெப்போலியன் போனபார்ட் போன்றோரின் காதல்கள் இவ்வாறு விதந்துரைக்கப்படுவன. குடும்ப அமைதி பொறுத்தவரை ஜென்னியினது காதலும், பொருளாதார நிலை பொறுத்தவரை ஏங்கெல்ஸின் நட்புமே கார்ல் மார்க்ஸின் மகத்தான நூல் ‘மூலதன’த்தின் பிறப்பிற்கு மறைமுக உந்துதல்கள் எனப்படுகிறது.

பெரு மேதாவிகளாயிருந்தாலும் தம் காமம், காதல் ஆகிய உணர்வுகளால் சாதாரண மனிதர்களாயே அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை அறிய நாம் வியப்பே கொள்கிறோம். குறிப்பாகக் கவனிக்க இங்கே ஒரு விஷயம் உண்டு. இப்பெண்கள் ஏற்கனவே கல்யாணமாகி குழந்தைகளுடனோ, குழந்தைகளின்றியோ, கணவனை உயிருடனோ இன்றியோ கொண்டிருந்தவர்கள் என்பதே அது. இவ்வகையில் முக்கியமான சரித்திரக் காதல் நெப்போலியன் ஜோசபின் மீது கொண்ட காதலாகும்.

(3)

நெப்போலியன் ஜோசபினுக்கு எழுதிய கடிதங்கள் பிரெஞ்சு மொழியில் தொகுப்பாக வந்தபோதே பிரபலமாகப் பேசப்பட்டவை. அண்மையில்கூட நெப்போலியன் ஜோசபினுக்கு எழுதிய கடிமொன்று கண்டடையப்பட்டு மிகப் பெருந்தொகைக்கு ஏலம் போயிருக்கிறது. மாவீரனென்று வரலாறு போற்றும் நெப்போலியன் ஜோசபின் காதலில் எவ்வளவு சாதாரண உணர்வுள்ள மனிதனாக, அவள் காதலை எந்நேரமும் இச்சிப்பவனாக இருந்தான் என்பதை இக்கடிதங்கள் எடுத்து விளக்குகின்றன.

பிரெஞ்சிலும் ஆங்கிலத்திலுமாய் இவர்கள் காதல் குறித்து பல்வேறு நாவல்கள் இதுவரை வெளிவந்துவிட்டன. இன்னும் பல நாவல்களுக்கே இக்காதல் அடித்தளமாய் இருக்குமென்றாலும் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ‘The Many Sorrows of Josephine B என்கிற இந்த நாவல் கனடா ஆங்கில இலக்கியத்தில் பெரிதாகப் பேசபட்டுமிருக்கவில்லை. அண்மையில் இதை வாசிக்கும் சந்தர்ப்பம் எதிர்பாராத விதமாகத்தான் கிடைத்தது. Books City இல் இப் புத்தகத்தை வாங்கி பல நாட்களாய் சும்மா அடுக்கிலேதான் போட்டுவைத்திருந்தேன். இல்லறத்தில் துறவறமும், வானப்பிரஸ்தத்தில் இல்லறமும் எனக்கு மாறுதலையாய் விதிக்கப்பட்ட குணங்கள். இவைகளின்படி என் புதிய துறவறம் துவங்கிய காலகட்டத்தில் ஒருநாள் இந்நூலை எடுத்துப் புரட்டினேன். நூல் முற்றுமாய் என்னைத் தன்னுள்ளே இழுத்துக்கொண்டது. வாசிப்பின் மிகச் சுகமான அனுபவத்தைத் தந்த நாவல்களில் இதையும் ஒன்றாகச் சொல்ல எனக்குத் தடையில்லை. அச் சுகத்தைப் பகிர்ந்து கொள்வதிலும் ஓர் இன்பமிருக்கும் என்பதாலேயே அதை இங்கே எழுதவும் முயல்கிறேன். ஆக, பகிர்வும் சுகானுபவத்தின் ஒரு வாசலாகிறது.

(4)

அமெரிக்காவில் சான் பிரான்சிஸ்கோவைப் பிறப்பிடமாகக்கொண்டவரும் தற்போது கனடா ஒன்ராரியோ மாகாணத்தில் வசித்து வருபவருமான சந்ரா காலான்ட் (Sandra Gallund) இதன் ஆசிரியர். கலிபோர்னியா பல்கலைக்கழகப் பட்டதாரியான இவர் 1970களின் ஆரம்பத்தில் கனடாவில் குடியேறினார். ஆரம்பத்தில் லப்ராடரில் இனுய் பழங்குடி இனத்தாரிடையிலான பள்ளிகளில் கடமையாற்றிய இவர், பின்னால் நூல் பதிப்பகத் துறையில் கடமையாற்றவேண்டி ஒன்ராரியோவுக்கு இடம்பெயர்ந்தார். ஏறக்குறைய பத்தாண்டுகள் பிடித்திருக்கின்றன இந் நாவலை இவர் எழுதி முடிக்க. 1995 இல் தடித்த அட்டைப் பதிப்பாக கார்ப்பர் கொலின்ஸ் வெளியிட்ட இந்நூலின் மலிவுப் பதிப்பு 1996 இல் வெளிவந்தது.

நாவல் ஜோசபின் பார்வையிலிருந்து விரிகிறது. ஜோசபினின் நாட்குறிப்பாக ஜூன் 23, 1777 இலிருந்து தொடங்கும் இந்நாவல், 1796 மார்ச் 09 உடன் முடிவடைகிறது. ஜோசபினின் சொந்த ஊரான மார்டினிகோவில் தொடங்கி, பிரான்சியப் புரட்சி ஏற்பட்ட பின்னர் பாரிசில் தொடங்கிய குடியாட்சி முடிவடையும் தறுவாயில் சுமார் பத்தொன்பது ஆண்டுகளைக் கொண்டது இதன் காலக் களம்.

படைப்பாளி சந்ரா காலான்ட் பிரான்சியப் புரட்சியின் அனுதாபியாக இல்லையென்றே தெரிகிறது. இந்த முரண், மேல்தட்டு மாந்தரின் வாழ்முறை, கலாச்சாரமாக விரியும் நாவலானதால், கதாமாந்தரின் அபிப்பிராயமாக நூலாசிரியரின் கருத்தைக் கொண்டுவிட வாசகனால் சுலபமாக முடிந்துவிடுகிறது.

மேலே…இன்னும் மேலே என்று முன்னேறத் துடிக்கும் மேல்தட்டு வர்க்கத்தினரின் மனோபாவம் காரணமாகவே ஜோசபினின் மார்டினிகோவிலிருந்தான முதல் நகர்வு தொடங்குகிறது. வயது வந்த எந்தவொரு பெண்ணுக்குமே திருமணம்தான் முக்கியமான அம்சமாகவிருக்கிறது அக் காலப் பகுதியான பதினெட்டாம் நூற்றாண்டில். அவர்களது இலக்கியப் படிப்பும், இசைப் பயிற்சியும், ஓவியக் கற்கையும் எல்லாமே உயர்ந்த இடத்தில் திருமணத்துக்கான முயற்சிகளாகவே இருந்துவந்திருக்கின்றன. பிரான்ஸ், இங்கிலாந்து, ரஷ்யா எதுவுமே இதற்கு விதிவிலக்காக இருக்கவில்லை. டால்ஸ்டாயின் ‘அன்னா கரினினா’ இதை தன் ஆரம்பப் பகுதிகளில் அழகாகப் படம் பிடித்திருக்கும்.

ஜோசபினின் வாழ்க்கையும் இவ்வாறே தொடங்குகிறது. அவளது தந்தையின் நிலத்தில் வேலைபார்க்கும் ஓர் ஆபிரிக்க மாந்திரீகப் பெண் வருங்காலமுரைப்பவளாக இருக்கிறாள். பெற்றோர் அறியாமல் அவளிடம் தன் வருங்காலம் கேட்கிறாள் ஜோசபின். மாந்திரீகப் பெண் அவள் அந்நாட்டு ராணியாவாள் என ஆரூடம் கூறுகிறாள். அவளது திருமணத்தில் விழவிருக்கும் சோகங்களையும் மாந்திரீகி சொல்லத் தவறவில்லை. அதுவே அவளின் பல்வேறு முயற்சிகளினதும், பல்வேறு பாதை மாறுதல்களினதும் மூலமாய் ஆகிவிடுகிறது. ஓர் எதிர்பார்ப்பு அவள் அடிமனத்தில் எந்நேரமும் இருந்து அவளை உசுப்பிக்கொண்டிருக்கிறது. குடிகாரத் தந்தையினால் தம் செல்வமிழக்கும் ஒரு குடும்பத்தில் பிறக்கும் ஜோசபின், தந்தையின் குணம் தெரிந்தும்தான் அவரை தன் பெருவிருப்புக்கும் மதிப்புக்கும் உரியவராக ஆக்கிவைத்திருக்கிறாள்.

முதலில் போகர்னேயுடனான திருமணம் அவளை பாரிஸ் நோக்கி நகர வைக்கிறது. மன்னர் காலத்திலும், பின்னர் குடியரசுக் காலத்திலும் மிக்க அதிகாரமுள்ள பதவி வகிக்கும் போகர்னே, சில யுத்த முனைகளில் குடியரசுப் படைகள் அடையும் தோல்வி காரணமாய் குடியரசுக்கு எதிரானவனெனக் குற்றஞ்சாட்டப்பட்டு மரண தண்டனை அடைகிறான். அவளது தனித்த வாழ்க்கையும், அரச மேலிடத்துத் தொடர்புகளும் மெல்லமெல்ல உருவாகின்றன. அதன் பின்னர்தான், நெப்போலியனது அறிமுகம் ஏற்படுகிறது அவளுக்கு. சொல்லப்போனால் ஒரு சாதாரண போர்வீரனாகவே ஆரம்பத்தில் அறிமுகமாகிறான் அவன். பின்னாலே அவுஸ்திரியாவுடனான யுத்தத்தில் அவன் படைத் தலைமை ஏற்பதிலிருந்துதான் படைத் தளபதியாக நெப்போலியன் உருவாகிறான். ஜோசபினுக்காகவேதான் உக்கிரமாகப் போர் புரிகிறான் அவன் என்பது படைப்பாளியால் சொல்லப்படாமலே வெளிக்காட்டப்படுகிறது.

நாவல் ஒருவகையில் நெப்போலியனது வெறிபிடித்த வகையான காதலை வெளிப்படுத்துகிறதெனினும், நாவலின் பிரதம பாத்திரம் ஜோசபின்தான். அவளூடாகவே பிரான்ஸ் நாட்டு வாழ்முறையும், வரலாறும் பேசப்படுகின்றன நாவலில். ஒரு திட்டமிட்ட வாழ்முறைக்கு தன்னையும் தன் மகனையும் எவ்வாறு அவள் வளர்த்தெடுக்கிறாள் என்பது நாவல் விரியும் தளம். அதை அற்புதமான முறையில் வடித்திருக்கிறார் சந்ரா காலான்ட். ஒரு கிராமியச் சிறுமியாக, பின்னர் பிரபு வம்சத்தில் திருமணமான சீமாட்டியாக, கணவனை விவாகரத்துச் செய்து தனித்துவாழும் பெண்ணாக, பின் கணவனை இழந்த மேட்டுக்குடிப் பெண்ணாகவென்று பல்வேறு வேடங்கள் ஜோசபினுக்கு. அவளடையும் இப் பரிமாணங்கள் அழகானவை. மட்டுமில்லை, திடமனம்கொண்ட ஒரு பெண்ணின் தவிர்க்கவியலாத வளர்ச்சிகளாவும் நாவலில் காட்டப்படுகின்றன. வரலாற்று மாந்தரின் வாழ்க்ககையை நேரில் கண்ட சுகம், நாவலை வாசித்து முடிக்கும் தருணத்தில் ஏற்படுவதைத் தவிர்க்கவே முடிவதில்லை.

வாழ்க்கையில் எவ்வளவுதான் உயர்ந்து சென்றாலும் அவளுள் இருந்த துக்கத்தின் கீர்த்தனங்கள் எந்தவொரு உன்னத நிலைமையிலும் இசைக்கவே செய்துகொண்டிருந்தன. அவை படைப்பாளியின் தலையீட்டில் வலிந்து புகுத்தும் முயற்சிகளாக இல்லாதிருந்தது நாவலின் வெற்றி.

சமீப காலங்களில் பரவலாகப் பேசப்பட்ட பல கனடாவின் ஆங்கில நாவல்களுக்கு எவ்வகையிலும் சமமானதே சந்ரா காலான்டின் ‘The Many Sorrows of Josephine B.’ தன் கட்டமைப்பால், விஷயங்களைப் புகுத்தும் நேர்த்தியினால், ஒரு பிரான்சிய வரலாற்றுப் புலத்தில் நாவலைப் படைக்கிறோம் என்ற பிரக்ஞையுடன் அதற்கான ஒரு மொழியைச் சுவீகரித்துக்கொண்டு படைப்பிலிறங்கியதன் மூலமாய் சிறந்த ஒரு நாவலைப் படைத்தவராகிறார் சந்ரா காலான்ட். கனடா ஆங்கில இலக்கியத்தை இந் நாவல் ஒரு சிறிதாவது முன்னகர்த்தியிருக்கிறது என்றாலும் தப்பில்லை.

00000

தாய்வீடு, பெப். 2008

No comments:

உட்கனல்

நீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...