Saturday, March 08, 2008

சிதைவும் கட்டமைப்பும்:4

தேவகாந்தன்(நான்கு)

எண்பதுகளின் பாதிக்குமேல் இலங்கையின் அரசியல் சார்ந்த இந்தியாவின் குழப்ப நிலைப்பாடு ஒரு தெளிவை அடைந்ததாக ஓரளவு சொல்ல முடியும். எண்பதுகள் வரை ‘இந்தியப் பொருட்களை வாங்கு, இந்தியனாக இரு’ என்ற தாரக மந்திரத்தை உச்சரித்துக்கொண்டிருந்த இந்தியா, பின்னால் சர்வதேச நாடுகளிpன் சந்தைக் காடாக ஆக நேர்ந்தது. பொருளாதாரக் கொள்கையில் ஏற்பட்ட இந்த மாற்றம், தவிர்க்க முடியாதபடி அரசியல் கருத்துநிலை மாற்றமாக உருவெடுக்கும். தன் அரசியலின் அம் மாற்றத்தை அது சத்தமின்றிப் பிரதிபலித்தது.

ஒரு படையெடுப்பாக அமைதி காக்கச் சென்ற படையொன்று மாறியதென்பது மிகப்பெரும் கொடுமை. உலக சரித்திரம் இதுவரை இதுபோன்றவொரு சம்பவத்தை அறிந்ததில்லை. இலங்கைத் தமிழர்மேலான யுத்தம், அதன் உள்ளீட்டு மாற்றத்தின் விளைவாகும். ஆனாலும் இத்தகு நிலைப்பாட்டிற்கு முன்னால் அது மேலும் கலங்கியே தெளியவேண்டியிருந்தது. தெளிவு சட்டெனப்போல துருத்திக்கொண்டு வெளியே தெரிந்தமை நிஜமே எனினும், அதற்காக அது காத்திருந்ததென்பதும் மெய்யே. அது குடிமக்கள் அகதிகள் என்று அனைவரையும் பாதித்தது.

இவ்வளவு கலகங்களுக்கும் மேலேதான் தீவிர இலக்கியம் சார்ந்த என் மனக் கட்டமைப்பு உருவானதாகச் சொல்லவேண்டும். சிதைவுகள் இன்னும் நடந்துகொண்டிருந்தன என்பதே சரி. அவ்வகையில் இங்கே நான் குறிப்பிடப்போகின்ற வி~யங்கள் சிதைவுக்கோ, கட்டமைப்புக்கோ பலவிதத்திலும் முக்கியமானவை. இவை ஓரளவு தமிழகத்தில் இருட்டடிப்புச் செய்யப்பட்ட செய்திகளாகவும் இருப்பதனால் சுருக்கமாகவெனினும் முழுமையாகச் சொல்லவேண்டுமென நினைக்கிறேன். இதை விட்டால் இதைத் தெரிவிக்க இத் தொடரில் எனக்கு வேறு தருணமும் ஏற்படாது.

இந்திய ராணுவம் தன் இழப்புகளோடும், மாறாத வடுவோடும் தாயகம் திரும்பியது 1990 தையில். மிக்க ராஜதந்திரமாக நடப்பதாக நினைத்துக்கொண்டு தன் அரசியல் நலனைப் பெரிதாகக் கருதி நடந்ததில் அது மேற்கொண்ட தமிழீழத்தின் மீதான யுத்த நடவடிக்கை அதற்கு இனியில்லையென்ற தோல்வியில் முடிந்தது. சிறிய ஒரு துண்டு நிலம் அதற்குச் சறுக்கிவிழுந்த குண்டுச்சட்டியாகிவிட்டிருந்தது. அந்த வெட்கத்தை மறைக்க அதற்கு மாபெரும் வரவேற்புக்கான ஏற்பாடு செய்தார்கள். தமிழக முதல்வராக அப்போதிருந்தவர் திரு.மு.கருணாநிதி. அவர் அவ் வைபவத்தை நிராகரித்து அதில் பங்குபெற மறுத்தார். தன் சொல்லுக்கும் நடத்தைக்குமான தூரத்தை கருணாநிதி கடந்த புள்ளி இதுதான். அவரது வாழ்வில் வேறெங்குமே இந்தமாதிரி ஒரு தருணம் இல்லை. சரி, .இந்தியப் படை திரும்பியாகிவிட்டது , இனி தமிழகத்தில் வாழும் ஈழ மக்களின் வாழ்வில் ஓரளவு நிம்மதி தோன்றிவிடும் என எண்ணி இயல்பான வாழ்வுக்கு நாங்கள் திரும்பிக்கொண்டிருக்கையில் நிகழ்ந்தது ஒரு விபத்து.

அதுதான் பத்மநாபா கொலை. அவரும், அவரோடு சேர்ந்த வேறு சிலரும், இன்னும் ஒரு இந்தியரும் ஒரு மாலை ஆறு மணிக்கு நடந்த துப்பாக்கித் தாக்குதலில் கொல்லப்படுகிறார்கள். அச் சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு ஏறக்குறைய ஒரு கி.மீ. தூரத்திலேயே நான் குடியிருந்துகொண்டிருந்தேன் அப்போது. அன்று நள்ளிரவு வீட்டின் கதவு தட்டப்படுகிறது. உறங்காதிருந்த நான் வெளியே வருகிறேன். ஒரு இன்ஸ்பெக்டர் உட்பட ஐந்தாறு பொலீஸார் நிற்கிறார்கள். ‘விடுதலைப் புலிகளின் தாக்குதலில் இந்தியர் ஒருவரும் கொல்லப்பட்டிருப்பதில் உள்@ர் மக்கள் கொதித்துப்போயிருக்கிறார்கள், நள்ளிரவுக்குமேல் இலங்கையரைத் தாக்கும் திட்டமிருக்கிறதாகத் தெரியவந்திருக்கிறது, இச் சூழலிலுள்ள எல்லா இலங்கையரையும் ஒரே இடத்தில் வைத்துப் பாதுகாப்புக் கொடுக்க மேலிடத்து உத்தரவு, ஆதலால் தாமதிக்காமல் நீங்கள் எங்களுடன் வரவேண்டு’மென்றார்கள். நானும் உண்மைதானெனவே நினைத்துவிட்டேன். 1984 இல் இந்திராகாந்தியின் கொலையின் பின் டெல்லி மாநகரில் சீக்கிய சமூகம் சூறையாடப்பட்ட கதையை நான் அறிந்திருந்தேன். அதனால் மறுப்பேதுமின்றிக் கூடிச்சென்றேன்.

பொலிஸ் நிலையம் சென்ற பிறகுதான் கண்டேன், அப்பகுதியில் குடியிருக்கும் சிலபேர்களே அங்கு இருந்துகொண்டிருப்பதை. சிலர் பணம் கொடுத்து அவ் வசதியீனங்களிலிருந்து தப்பிவிட்டமையைப் பின்னர்தான் சாமியென்றவர் சொல்லக் கேட்டறிந்தேன். மேலும் சிலர் அங்கே அழைத்து வரப்படுகிறார்கள். பெரிய பொலிஸ் வாகனம் வருகிறது. நான், மனைவி, பிள்ளைகள் எல்லோரும் ஏற்றப்படுகிறோம். கமி~னர் அலுவலகத்துக்குக் கொண்டுசெல்லுகிறார்கள்.

விடியும்வரை அங்கே ஒரு கூடத்தில் தங்கவைக்கப்படுகிறோம். மறுநாள் மாலைவரை ‘இதோ விட்டுவிடுகிறோம், விட்டுவிடுகிறோம்’ என்ற சமாளிப்போடு நேரத்தைக் கடத்தியவர்கள், மாலை ஆறு மணியானதும் வேறு அவதாரமெடுக்கிறார்கள். அவர்கள் எதிர்பார்த்திருந்த மேலிடத்து உத்தரவு அப்போதுதான் வந்திருந்ததுபோலும்! பேண்கள், குழந்தைகள் எல்லோரும் வெளியேறிச் செல்லக் கேட்கப்படுகிறார்கள். ஆண்கள் மட்டுமே இப்போது கூடத்தில்.

சிறிதுநேரத்தில், மறுபடி பொலிஸ் வாகனத்தில் நாங்கள் ஏற்றப்படுகிறோம். விசே~ ஏற்பாட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட, எங்கள் எல்லோருக்கும் பதினைந்து நாள் விளக்க மறியலுக்கு உத்தரவிடப்படுகிறது.

ஏறக்குறைய ஐந்நூறு பேர். யாரும் விதிவிலக்காகவில்லை. அவர்களில் ஏறக்குறைய எல்லோருமே ஈ.பி.ஆர்.எல்.எஃப். காரர்கள்;. பத்மநாபாவின் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். அவரது மரணச் சடங்கில் பங்கேற்கவும் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. எல்லோரும் குமுறினார்கள். ஆனால் சொல்வதற்குத்தான் ஒன்றுமிருக்கவில்லை. அத்தோடு செய்வதற்கும்.

சிறைச் சாலையில் நடந்ததோ இன்னும் சுவையான சம்பவம்.

சிறைச்சாலையில் நாங்கள் நான்குபேர் எந்த இயக்கத்தையும் சார்ந்தவர்களில்லை என உறுதியாக வாதாடினோம். ‘நீங்கள் ஈ.பி.ஆர்.எல்.எஃப். இல்லையா?சரி. தமிழகத்து ஆட்களா?’ என்று கேட்டார்கள். இல்லையென்றோம். ‘அப்ப விடுதலைப் புலிகள்தானே!’ எனத் தீர்மானமாகச் சொல்லிவிட்டனர். எனவே நாங்கள் நான்குபேரும் தனியாக, மூடுண்ட சிறையெனப்படும் தண்டனை பெற்ற கைதிகளை அதிகமாகக்கொண்ட பகுதியில் அடைக்கப்பட்டோம். மற்றவர்கள் திறந்த சிறை எனப்படும் வகையான பகுதியில் அடைக்கப்பட்டனர். அப்போதும், ‘ மேலிடத்து உத்தரவு வந்ததும் உங்களை விட்டுவிடுவோம்’ என்று உறுதி கொடுத்துத்தான் ஈ.பி.ஆர்.எல்.எஃப். காரர்களை அடைத்தார்களாம். பத்மநாபாவின் சாவு வீட்டுக்குச் செல்ல ஆர்வத்தோடு இருந்தவர்கள் அவர்கள்.

எதுவும் நடக்கவில்லை. ஒரு கிழமை ஆயிற்று. பத்து நாட்களும் ஆயின. ‘மினிஸ்ரரோடு பேசியாகிவிட்டது , சி;எம்.மின் பதிலை எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம், நாளை அல்லது நாளை மறுநாள் உங்களை விட்டுவிடுவோம்’ என்று திறந்தவெளியில் சிறைவைக்கப்பட்டவர்களிடம் கூறியிருக்கிறார்கள் சிறை அதிகாரிகள். அவர்களில் சிலர் சிறை மேலதிகாரியைச் சந்தித்துப் பேசியபோது அவரும் அதையே சொல்லியிருக்கிறார். அதுதான் கடைசித் தவணை என்றுவிட்டுத் திரும்பிவிட்டார்கள்.

தனியாக அடைக்கப்பட்ட எங்கள் நால்வர் சார்பில் வழக்கு நடத்தி எங்கள் நால்வரை
யும் பிணையில் விடுவிப்பதற்கான நீதிமன்ற அனுமதி பெறப்பட்ட அன்றுதான் சிறையதிகாரி ஈ.பி.எல்.ஆர்.எஃப்.காரருக்குக் கொடுத்த தவணையின் கடைசிநாளாகும்.

அது ஒரு மதியச் சாப்பாட்டின் பின்னான நேரம். பிணையனுமதியைக் கொண்டுவரப்போகும் எங்கள் வழக்கறிஞரை எதிர்பார்த்து நாங்கள் காத்திருக்கிறோம். சிறை மேலதிகாரியின் அலுவலகப் பக்கமாய் ஒரே சத்தம் சந்தடி. ஆட்கள் இங்கேயும் அங்கேயுமாய் ஓடித்திரிவது போலிருந்தது. சிறிதுநேரத்தில் தண்டனைபெற்றிருந்த வேறு பகுதி மூடுண்ட சிறைக் கைதிகள், சமையலறையில் அடுப்பெரிக்கப் பயன்படுத்த வைத்திருந்த பெரிய பெரிய விறகு கட்டைகளோடு ஆயுதபாணிகள்போல் அலுவலகப் பக்கமாகப் போய்க்கொண்டிருப்பதைக் கண்டோம். என்னவென ஒரு சிறைக் காவலாளியை விசாரித்தபோது அவர் சொன்னார், ‘திறந்தவெளிச் சிறையிலிருந்த உங்கள் ஆட்கள் கதவுகளை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று சிறை மேலதிகாரியையே தாக்கியிருக்கிறார்கள், அவரது அலுவலகத்தைச் சூறையாடியிருக்கிறார்கள், சுமார் ஐந்நூறு பேரைச் சிறைக்குள்ளிருக்கும் காவலாளிகளால் சமாளிக்க முடியுமா? அதுதான் கலகத்தை அடக்க தண்டனைபெற்றிருந்த இந்தியக் கைதிகளை அனுப்பியிருக்கிறோம்’ என்று. இது கேட்டு எமது பகுதிச் சிறையில் பல்வேறு காரணங்களுக்காகவும் சிறையிருந்த இலங்கைத் தமிழ் இளைஞர்கள் சீறி எழுந்து, இலங்கை இளைஞன் எவன் தாக்கப்பட்டாலும் பதிலடி தருவோமென ஆக்ரோ~ப்பட்டார்கள். மூடுண்ட சிறையின் பூட்டப்பட்டிருந்த பெரிய கதவைத் தள்ளியும் இழுத்தும் மூர்க்கம் காட்டியதில் கேற் பிரிந்து விடுகிறது. தாக்க அனுப்பப்பட்ட கைதிகளில் ஒரு பகுதி இந்தப் பக்கமாகத் திரும்பியது.

முடிந்தது கதை. ஒரு மணி நேரம் குருN~த்திரமாகிவிட்டது சிறைச்சாலை. பலர் காயப்பட்டனர். பலர் மரண தறுவாயில். இலங்கைத் தமிழிளைஞர்களோடு மிக ஒட்டாகவிருந்த ஒரு ஆங்கில இந்தியரும் அடையாளம் தெரியாது தாக்கப்பட்டார். விறகுக் கட்டைகளால் அவர் தாக்கப்பட்டபோது அவரது எலும்பு முறிந்த சத்தத்தையே நான் கேட்டேன். அதற்கிடையில் கலகமடக்கும் பொலிஸ் வருவிக்கப்பட்டிருந்தது. கலகம் அடங்கியது. மாலை ஆறு மணியளவில் பத்மநாபா கொலையன்று கொண்டுவந்து அடைக்கப்பட்ட அத்தனை பேரும் விடுவிக்கபட்டு தமிழகத்தின் பல்வேறு அகதி முகாம்களுக்கும் தனியார் பஸ்கள் வருவிக்கப்பட்டு அவற்றிலேற்றி அனுப்பிவைக்கப்பட்டனர். நாங்களும் விடுதலை பெற்று வெளியேறினோம்.

நாங்கள் நால்வரும் தாக்குதலிலிருந்து தப்பியது இங்கே சுவையான கதை.

தாக்க அனுப்பப்பட்ட கைதிகளுக்கு சொல்லியனுப்பப்பட்டிருந்த அடையாளம், தாக்கப்படவேண்டியவர்கள் தண்டனை பெறாத இலங்கைக் கைதிகள் என்பதாகும். நாங்கள் தங்கவைக்கப்பட்டிருந்த சிறைத் தண்டனை பெற்ற கைதிகள் அதிகமாயுள்ள பகுதியேயெனினும், அங்கேயும் தண்டனைபெறாத இலங்கைக் கைதிகள் இருந்தனர். தமிழகச் சிறைகளில், குறிப்பாக சென்னைச் சிறையினில் உள்ள விசே~ம் என்னவெனில், தண்டனை பெற்ற கைதிகள் சிறை விதிகளின்படி வெள்ளைக் கழிசானும் வெள்ளைச் சேர்ட்டும் அணிந்திருக்கவேண்டும் என்பதாகும். ஆக, தாக்க வந்தவர்கள் சாரத்தோடும் லோங்ஸோடும் இருப்பவர்களிலேயே இலங்கையரைத்; தேடிக்கொண்டிருந்தனர். சிறை மேலதிகாரி தாக்கப்பட்ட வி~யத்தில் இலங்கையர் தாக்கப்படவேண்டியிருந்திருப்பின் தாக்க வந்தவர்கள் திறந்த வெளிச் சிறையிருந்தவர்களில் அவர்களைச் சுலபமாக இனங்கண்டிருக்க முடியும். ஆனால் ஒரு குறிப்பிட்ட பகுதி அங்கேயே தங்கள் இலக்கினைக் குறிவைத்திருந்தது. ஏற்கனவே அங்கே அவர்களுக்குள்ளிருந்த முரணைத் தீர்க்க அன்றைய தருணத்தை அவர்கள் பயன்படுத்திக்கொண்டார்களென பின்னர் தெரிந்தது.

தண்டனை பெற்ற கைதிகளுடனான சகவாசம் எனக்குத்தான் முதற் பெரு நன்மையைச் செய்தது. ஒரு தனியுலகம் எனக்கு விடியல் காட்டியிருந்தது அங்கே. தூக்குத் தண்டனை பெற்றவர்கள், தூக்குத் தண்டனையோ ஆயுட் தண்டனையோ பெற்று மறுமுறையீடு செய்துவிட்டுக் காத்திருந்தோர், தண்டனை உறுதிப்படுத்தப்பட்;ட பின் தீர்ப்பைக் கழித்துக்கொண்டிருந்தோர் என தண்டனைவாரியாக அவர்கள் பலவிதம். கொலைகாரர், பாலியல் வல்லுறவாளர், திருடர்கள் எனப் பலரோடும் ஒரு பதின்நான்கு நாட்கள் எனக்குப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. அவர்களுக்குள்ளிருந்த ஈரத்தை நேரில் நான் கண்டேன். பலப்பல கதைகள். ஒருவர் தன் ஆசிரியையைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியவர். அவருக்கு பத்து வரு~ தண்டனை கிடைத்திருந்தது. ஐந்தோ ஆறு வரு~ங்களைச் சிறையில் முடித்திருந்தார். இன்னும் இரண்டொரு வரு~த்தில் வெளியேறவிருந்தார். திரும்பிச் சென்றும் அவ் ஆசிரியரை வல்லுறவுக்கு உட்படுத்தப்போவதாக ஆக்ரோ~முடன் சொல்லிக்கொண்டிருந்தார். அவரைப் பார்க்கவே எனக்குப் பயமாகவிருக்கும். ஆனால் அவரோ என்னையே தேடிவந்து பேசிக்கொண்டிருப்பார். நாளடைவில் அவரை என்னால் புரியமுடிந்தது என்றே இப்போது நினைக்கத் தோன்றுகிறது. ஆசிரியை ஒருபோது அவரை விரும்பியிருந்துவிட்டு பின்னர் மாணவனோடு அப்படியொரு ஒரு உறவு தகாதென அவரைப் புறக்கணித்தவராம். ஆண்டுக்கணக்காய்க் காத்திருந்து அந்தப் பழியை அவர் முடித்திருந்தாராம். இப்படி எத்தனையோ கதைகள்.

இலங்கையர் தாக்கப்பட ஆரம்பித்ததும், அவர்கள்தான், ‘ சிறையுடையிலிருந்தால் தாக்கப்பட மாட்டீர்கள்’ எனக் கூறி தங்கள் வெள்ளைச் சிறையுடைகளைத் தந்து எங்கள் அடையாளங்களை அழியவைத்து எங்களைக் காத்தவர்கள். அதனால் மட்டுமில்லை. அவர்களே நல்லவர்களாக இருந்தார்களென்பதே நேரில் பழகிய என் அனுபவம் எனக்குக் கூறுவது. இவற்றையெல்லாம் நான் எங்கே தேடிப் படிக்க முடியும்? பதினைந்து நாள் இவ்வாறான சிறைத்தண்டனை எனக்கு ஒரு வழியில் நன்மையாகவே முடிந்தது.

இந்தச் சிறைக் கலகம்பற்றிய வி~யம் எந்தப் பத்திரிகையிலும் வெளிவந்ததாகத் தெரியவில்லை. தெரியாததால் வெளியிடவில்லையென்றில்லை, வெளியிடக் கூடாதென்ற மேலிடத்து உத்தரவால் வெளியிடவில்லையென்பதுதான் சரி.

பிறகு 1991இல் ராஜீவ் காந்தி கொலை நடக்கிறது. நாடே அல்லோல கல்லோலப்படுகிறது. அதில் ஒரு அரசியல் இருந்ததில் தாக்குபவர்களின் குறி தி.மு.க.வினராக இருந்தது. அதனால் இலங்கையர் பெருமளவில் பாதிப்படையவில்லையெனினும், கெடுபிடிக்குக் குறைவிருக்கவில்லை. மனச்சாட்சி அளவில் அரசியல் பேசத் தடையிருந்த எனக்கு, சட்ட ரீதியாகவும், பொலிஸ் ரீதியாகவும்கூட இப்போது அரசியல் பேசத் தடையாகிவிட்டது. இலக்கியத்தில் முற்றுமுழுதாக ஒதுங்குவது தவிர வேறு வழி இருக்கவில்லை.

அக் காலகட்டத்தில் நான் எழுதி, 1991இல் தேவி பிரசுராலய வெளியீடாய் வந்ததுதான் ‘எழுதாத சரித்திரங்கள்’ என்ற என் குறுநாவல் தொகுப்பு. இது என் மூன்றாவது நூலாகும். இதை காந்தளகம் விற்பனை செய்தது. எனது அடுத்த நூல் ‘விதி’. கனகம் பதிப்பகம் வெளியீடான இந் நாவலுக்கு நெய்வேலி வேர்கள் இலக்கியவட்டம் விற்பனையுரிமை பெற்றிருந்தது. அந் நாவல் தமிழகத்தில் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியதாகக்கூடச் சொல்ல முடியும். சென்னை ஹிந்து பத்திரிகை வெகுவாகப் பாராட்டியிருந்தது. சிறந்த நாவல்களுள் ஒன்றாக கோவை ஞானியாலும் இது கொள்ளப்பட்டது. இது பற்றிய விபரம் அவரது ‘தொண்ணூறுகளின் சிறந்த நாவல்கள்’ என்ற நூலில் உள்ளது. அத்தனைக்கு ஒரு அகதியின் கதை அழகாகவும் ஆழமாகவும் சொல்லப்பட்டிருக்கும் அதில்.

அக்காலகட்டத்துக்குச் சற்று முன்னால் வெளிவந்தது ‘என்ன ஆசை இது!’ என்ற சிறுகதை. ஒரு மரணம் எவ்வளவு இயல்பாகவும், எவ்வளவு இனிமையாகவும் வரவேண்டியதென்பதைச் சிறப்பாய் எடுத்துச் சொன்ன கதை அது. திரு.கஸ்தூரிரங்கன் ஆசிரியராகவிருந்த தருணத்தில் தினமணி கதிரில் வெளியானது. அதற்கான சன்மானப் பணம் அதுவரை கிடைக்கவில்லையென வெகு பணமுடை ஏற்பட்ட ஒருநாளில் தினமணி அலுவலகம் சென்றிருந்தேன்.

அப்போதுதான் தினமணியின் ஞாயிறு இணைப்பான கதிருக்குப் பொறுப்பாளராகவிருந்த திரு.திருப்பூர் கிரு~;ணனை நான் அறிமுகமானது. அனுப்பிய சன்மானப் பணம் கடிதத்தில் திரும்பிவந்துவிட்ட நிலையில், பணத்தை எப்படிச் சேர்ப்பிப்பது என்றும், படைப்பாளியையே நேரில் எப்படிப் பார்ப்பது என்றும் தெரியாமல் தான் வருத்தப்பட்டுக்கொண்டிருந்ததாகக் கூறி, பணவோலையைத் தந்தார் திருப்பூர் கிரு~;ணன். கதையையும் வெகுவாகப் பாராட்டினார். அத் தருணத்தில்தான் என்னைப் பற்றிச் சிறிது விசாரித்தார். அளவளாவிக்கொண்டிருக்கையில் கேட்டேன், ‘தீபம் நா.பா.வின் முகவரி எடுக்க முடியுமா?’ என்று. ஏனென்று கேட்டார். ‘சந்திக்க விருப்பம், எனக்குப் பிடித்திருந்த எழுத்தாளர்’ என்றேன். தனக்கும் பிடித்த எழுத்தாளர்தானென்றும், ஆனால் அவர் அப்போது உயிரோடு இல்லையென்றும் சொன்னார் கிரு~;ணன். ஏனக்கு மிகவம் மனவருத்தமாகப்போய்விட்டது. சந்திக்க முடியாது போய்விட்டதே என்பதற்காக மட்டுமில்லை, அவர் மறைவையே தெரியாதிருந்திருக்கிறேனே என்பதனாலுமாகும். கிரு~;ணன் என்னைத் தேற்றினார். ஆகதி நிலைமையில் அதுவெல்லாம் தவறிவிடுவது சகஜம்தான். அன்றிலிருந்து இன்றுவரை நண்பர்களாகவே இருக்கின்றோம். ‘என்ன ஆசை இது’ சிறுகதை என்னில் அவருக்கு மதிப்பேற்படக் காரணமெனில், அவருக்குள்ள பரந்துபட்ட எழுத்தினதும், எழுத்தாளர்களினதும் பரிச்சயமும், நா.பா.மீதிருந்த பற்றும் பழக்கமும் அவரில் எனக்கு மரியாதையை ஏற்படுத்தின.

நா.பா.நினைவுக் கூட்டம் ஆண்டுதோறும் ஜனவரியில் நடக்கிறது. சென்னையிலிருந்தவரை நானும் தவறாது அதற்குப் போய்க்கொண்டேயிருந்தேன். அங்கேதான் திருவாளர்கள் பா.அமிழ்தன், திருமலை, சேவற்கொடியோன், விஜயா பதிப்பகம் மு.வேலாயுதம், குறிஞ்சிவேலன் போன்ற பலபேரை அறிமுகமானேன்.

நா.பா.வின் எழுத்துக்களை ஒரு தீவிர வாசகன் இன்று ஒதுக்கவே செய்வான். அவர் நடத்திய ‘தீபம்’கூட சாதனை நிகழ்த்திய சஞ்சிகையென்று சொல்லமுடியாது. பரந்துபட்ட வாசகர்களை உருவாக்கியதும், எழுத்துத் தளமாய் இருந்ததும்தவிர தீபம் எதையும் சாதித்தது என்று சொல்லமுடியாவிட்டாலும், அதற்கான ஒரு இடம் இலக்கிய அல்லது சிறுபத்திரிகை வரலாற்றில் உண்டு. நா.பா.வுக்கும் அப்படியே. நா.பா.சிறந்த எழுத்தாளர் இல்லையெனினும் எனக்குப் பிடித்த எழுத்தாளர். அதனால்தான் என் ‘இலக்கு’ சிறுபத்திரிகையின் ஒரு இதழ் நா.பா. சிறப்பு மலராக வெளிவந்தது. நா.பா.சிறந்த ஏழுத்தாளர் இல்லையெனின் அவருக்கு ஏன் சிறப்பிதழ் வெளியிட்டேன்? அதுபற்றி நான் சொல்லவேவேண்டும்.

No comments:

உட்கனல்

நீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...