Saturday, March 01, 2008

அதை அதுவாக 3 (தேர்ந்த குறள்கள்)

தேவகாந்தன்(6)


கெடுவாக வையாது உலகம் நடுவாக
நன்றிக்கண் தங்கியான் தாழ்வு

(அறம், இல்லறம், நடுவுநிலைமை 7) குறள் 117


000


(நடுநிலையில் நின்றதனால் ஒருவன் கீழ்நிலையை அடைய நேரிட்டாலும் அதை
இகழ்ச்சியாக இந்த உலகம் எண்ணாது.)

000நாமக்கல் கவிஞரின் கருத்து இதற்குச் சிறிது மாறுபட்டது.
ஏழையாக இருந்தாலும் நடுநிலைமையுடன் நடந்துகொள்பவனை உலகம் இகழாமல் சிறப்புச் செய்யும் என்கிறார் அவர்.

நெஞ்சு இகந்து சான்றோர் நடந்துவிடக் கூடாது, கெட்டுப்போதலும் வளமாக வாழ்தலும் உலகத்தில் இயற்கையான வி~யங்கள், மட்டுமல்லாமல் அவை மாறும் இயல்புமுடையவை என்ற பொருள் இவ்வதிகாரத்தின் ஐந்தாம் குறளிலேயுண்டு.

அதனால் நடுநிலையில் நின்றதனால்; தாழ்வுற்றவனை உலகம் ஒருபோதும் இகழாது என்றுதான் வள்ளுவன் சொல்லியிருக்க முடியுமென்பதே பொருத்தமான அர்த்தமாகத் தோன்றுகிறது.

பொருளில்லாதவனை அன்றைய உலகம் தூற்றியதென்பது இதன் மறுபக்கம்.

‘பொருள் செயல்வகை’ என்ற அதிகாரத்தின்மூலமும், இன்னும் பல குறள்களின் மூலமும் இந்த உலகத்தில் பொருளின் அவசியத்தை வற்புறுத்தியவன் வள்ளுவன்.

‘பொருளிலார்க்கு இல்லை இவ்வுல’கென்று துணிந்து சொல்ல எவரால் முடிந்திருந்தது?
‘செய்க பொருளை’என்று தொடங்கும் குறள், கட்டளையாகவே ஒலிக்கும்.

பொருள் கெட்டவனும், பொருளற்றவனும் உலகத்தாரால் இகழப்பட்ட நிஜம் வள்ளுவனுக்குத் தெரியும்.
தெரிந்திருந்தும்தான் ‘கெடுவாக வையாது உலகம், நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு’ என்று கூறினான்.
தாழ்வை ஒரு பொருட்டாகவே இந்த உலகம் அப்போது எண்ணாதாம்!

இந்த உலகத்துக்கு இப்போது அவசியமாய்த் தேவைப்படுவது இந்த நம்பிக்கைதான்.
இது பல அறங்களை நிலைநிறுத்த உதவும்.

00

(7)

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.
(அறம், இல்லறம், ஒழுக்கமுடைமை 10) குறள் 140


000

(பல நூல்களைக் கற்றிருந்தும் உலகத்தோடு ஒட்ட ஒழுகல் தெரியாதவர் அறிவில்லாதவரே.)


000


ஊரோடு ஒத்து வாழத் தெரியாதவர்கள் என்னதான் கற்றவராயிருந்தாலும் அறிவில்லாதவரேயாவர் என்பது இக்குறளின் கருத்து.

‘உலகமென்பது உயர்ந்தோர் மேற்று’ என்றபடி கொண்டு, உலகத்தோடு என்பதில் வரும் உலகத்துக்கும் உயர்ந்தோர் எனவே பொருளுரைத்திருக்கிறார் மு.வ.

திருக்குறள் எக்காலத்துக்கும் பொருந்திய நெறியென்பர்.
மனிதப் பண்புகள், வழக்கங்கள், பழக்கங்கள், மரபுகள் எல்லாம் இயற்கையினோடும் சூழலினோடுமான இசைவின் வெளிப்பாடுகள்.
ஒரு சடங்கானது உண்மையில் ஒரு அவசியத்தின்மேலே எழுவதேயாகும்.
அதுவே பண்பாடாய், மரபாய் காலப்போக்கில் இறுகி வளரும்.
ஒரு பகுதியிலே வாழும் மக்களின் இயல்பென்பது அப் பகுதிச் சூழலுக்கான இசைவின் அம்சம்.
அதனோடு ஒட்டுறவு கொண்டிருத்தலே சரியான வாழ்தல் முறைமை.

‘ஊரோடு ஒத்தோடு’ என்று இரண்டே சொல்லில் அவ்வை சொன்னதும் ஒன்றே முக்கால் அடிகளில் குறள் சொன்னதைத்தான்.

அவ்வை வென்றுநிற்கும் இடமாக இது எனக்குத் தெரிகிறது.

அவ்வைப் பெண்ணின் வெற்றியைச் சகிக்க முடியாமற்தான்
அன்றைய சமூகம் அவளை வள்ளுனின் சகோதரியாக்கிக்
கதை புனைந்து வைத்ததோ.

00
(8)


நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம்
மலையினும் மாணப் பெரிது.
(அறம், இல்லறம், அடக்கமுடைமை 4) குறள் 134000


(தன்னிலையில் திரியாது அடக்கமாயிருப்பவனின் சுயமானது உண்மையில் மலையைவிடப் பெரிது.)


000


அடங்குவது எப்படியெனில், அறிவறிந்து ஆற்றின் அடங்கவேண்டும்.
அறியவேண்டுவனவற்றை அறிந்து, தெளிந்து நல்வழியில் அடங்குதலென்று இதற்குப் பொருள் விளக்கம் கூறலாம்.

அடக்கமானது ஒருவனைத் தேவனாக்கும் என்ற திருவள்ளுவத் தேவன்,
அடக்கத்தையே ஒரு செல்வமாக ஓம்புமின் என்றவன்.
கோழைமை பலஹீனங்கள் போன்றனவும் அடக்கமென்ற பெயரில் இடம்பெற்றுவிடக் கூடாது என்பதனாலேயே அடங்கவேண்டிய பாங்குபற்றி இவ்வளவு தெளிவுபடக் கூறினான்.

அடக்கத்தைப் பணிதலென்றும் சொல்லும் திருக்குறள்.
அதிலேயும் மெல்லிய பிரிநிலையொன்றிருப்பதை அது வற்புறுத்தும்.
அடங்கியிருக்கும் அடக்கம் உச்சமடைகிறபோது விர்ரென விஸ்வரூபம் காட்டி எழுந்துவிடும்.
குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளியை ஒரு கணம்கூடக் காக்கமுடியாது.

அடங்குகிறபோதுகூட அத்தனை வீறும் அதனுள் துடித்துக்கொண்டேயிருக்கும்.
அதுதான் மலையைவிடப் பெரிதான தோற்றத்தை ஒருவனுக்கு அளிப்பது.
00(9)

விளிந்தாரின் வேறல்லர் மன்ற தெளிந்தாரில்
தீமை புரிந்தொழுகு வார்
(அறம், இல்லறம், பிறனில்விழையாமை – 3) குறள் - 143


000

(தன்னை நன்கு நம்பியிருப்பரிடத்தில் ஒரு தீமையைப் புரிபவன் செத்தவனுக்குச் சமமானவன் ஆவான்.)

000


இக் குறளில் இருப்பது ஒருவகைச் சாபம்தான்.
மண்ணாய்ப் போவான்.. நாசமாய்ப் போவான் … என்று இக் குறள் கூறுவதாய்த்தான் எடுக்கவேண்டும்.

பிறனில் விழையாமை என்ற அதிகாரத்தி;ல் வருவதனாலேயே இக் குறளில் வரும் ‘தெளிந்தாரில்’ என்ற சீருக்கு தெளிந்தார் + இல் எனப் பகுத்து நம்பியவரின் வீடு என்றும், நம்பியவரின் வீட்டுத் தலைவி என்றும் பொருள் கொள்வார் சிலர்.

மு.வ. பொருள் கண்டது இவ்வண்ணமே.

எந்தப் பொருளையும் ஏற்றிச் சொல்லக்கூடியதாய்த் திருக்குறளிலே பல குறள்கள் உண்டு. அதிகாரத்தை நீக்கிப் பார்த்தால் ஒரு பொது நீதி ஓடிவந்து விழுந்திருக்கும் அதில்.

அவ்வாறான குறள்களில் இதுவும் ஒன்று.

முதுகில் குத்துதல் என்;;ற பதச் சேர்க்கைக்கு இக் காலத்தில் அரசியல் சாயம்தான் உண்டு. நம்பிய கட்சித் தலைவனை விட்டு மாற்றணிக்குத் தாவிவிடுதல் என்று இந்த இடத்திலே பொருத்திப் பார்த்தாலும் பொருள் தகவே விரியும்.

இந்த அதிகாரத்தில் ஒரு விசே~த்தைக் கவனிக்கமுடியும்.
மனைவியை ஒருவனின் சொத்தாகக் கருதிய அக் காலகட்டத்து சமூக நிலைமையை இவ்வதிகாரம்மூலம் நமக்குப் புரிதலாகிறது.

பெண்ணை ‘பிறன் பொருளாள்’ , ‘பிறன் இயலாள்’, ‘பிறற்குரியாள்’, ‘பிறன் வரையாள்’ என்று பல இடங்களிலும் அது கூறுவது இந்தத் தளத்திலிருந்துதான்.

‘எளிதாக இல்லிறப்பான்’ என்று இவ்வதிகாரத்தின் இன்னொரு குறளில் வருகிறது.
பிறன் மனைவியைச் சேர்தல் அல்லது கல்யாணமான தான் இல் அறம் இகந்து பிற பெண்ணைச் சேர்தல் எங்ஙனம் இலகுவானதாகும்.
பொருள் வயிற் பிரிவு மேற்கொண்டு கணவன் வேற்றூர் சென்றிருக்கும்போது, கிளர்ந்த காமாக்னியைத் தணிக்க பெண்டிரே பிற ஆடவரை நச்சி அடைந்திருப்பர் என்று கொள்ளலாமா.
பரத்தையர் சேரி ஆணுக்குத்தானே.
ஒழுக்கமும் காம வரையறையும் பிறழ்ந்திருந்த காலமாக அது இருந்திருக்கக்கூடுமோ.

திருக்குறள் தோன்றியது சங்க மருவிய காலத்தில் என்பார்கள். அது களப்பிரர் ஆண்டதான இருண்ட காலமாகும். அக் காலத்தின் ஒழுக்கச் சிதைவை சரித்திரம் உறுதிப்படுத்துகிறது.
திருக்குறளே பல அறச் சிதைவுகளைச் செப்பனிடுதலையும், மேலும் பல் சிதைவுகள் நேராமல் காத்தலையும் தன்னின் ஒரு நோக்கமாகக்கொண்டு தோன்றியதென்று கூறுதலும் சரியான வாதமாகவே இருக்கும்.

‘அன்னமிட்ட வீட்டிலே, கன்னக்கோல் சாத்தவே, எண்ணங்கொண்ட பாவிகள், மண்ணாய்ப் போக நேரும்’ என்பது நவகால கவிச் சாபம்.
இளிந்தாரின் வேறல்லர் என்பது பண்டைத் தமிழ்க் குரல்.

திருக்குறளின் சிறப்புக்களுள் ஒன்றென நான் கருதுவது , அது ஏனைய இலக்கியங்கள்போல் வி~யத்தைச் சொல்லிவிட்டு ஒதுங்கிவிடுவதாய் இல்லாமலிருப்பதுதான்.

அது மிகப் பலவிடங்களில் எச்சரிக்கை விடுக்கும்; பலவிடங்களில் அழுத்தமாய் வற்புறுத்தும்; சில் இடங்களில் கட்டளையிடும்; வெகு சிலவிடங்களில்…. சபிக்கும்!

00

No comments:

உட்கனல்

நீண்ட காலத்துக்குப் பிறகு ஊர் காண வந்திருந்த நவநீதத்திற்கு அந்த இடத்தை அன்று காரிலே கடந்துசெல்ல நேர்ந்த வேளையில் நெஞ்சின் ஆழத்திலிரு...