அதை அதுவாக 7

உள்ளது உணர்ந்தபடி
(தேர்ந்த குறள்கள்) 7

‘வள்ளுவன் வளையுமிடங்களெல்லாம்
காலத்தை மீறமுடியாத தருணங்களின் விளைச்சலே’

-தேவகாந்தன்-



(23)

அருளிலார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளிலார்க்கு
இவ்வுலகம் இல்லாகி யாங்கு
(அறம், துறவறம், அருளுடைமை 7) குறள் 247

பொருளில்லாதவர்களுக்கு இவ்வுலக நன்மைகள் இல்லைப்போல, அருளில்லாதவர்களுக்கு மோட்ச உலகத்துப் பயன்கள் இல்;;லை.


இந்த உலகத்து வாழ்வுக்குப் பொருள் அவசியம். மறுமை உலகத்துக்கு அருள் அவசியம். ஆனாலும் இரண்டையும் ஒரே தரத்தினதாக வள்ளுவன் மதிப்பதில்லை. உலகவியல்பைச் சொன்ன குறள்இது. ஆனால் இவ்வதிகாரத்தின் ஏனைய குறள்கள் பொருளைவிட அருளே சிறந்ததென்கிற முடிவையெடுக்கவே வற்புறுத்தி நிற்கும்.

கெட்டவர்களிடத்திலும் பொருள் சேரக்கூடியது என்பான் திருவள்ளுவன்.
மேலும், பொருளற்றவர் ஒருகாலத்தில் பொருளுடையவராய் ஆதலும் கூடுமென்றும், அருளற்றவரோ அற்றவர்தான், அவர் எப்போதும் அருளாளர் ஆகவே முடியாதென்றும் அவன் கூறுவான்.

துறவறவியலைத் துவக்கிவைக்கும் இவ்வதிகாரம் அற்புதமான வைப்பு.
குறள் தோன்றிய காலம் தமிழிலக்கிய வரலாற்றிலே அறநெறிக் காலமென்று சொல்லப்படுகிற காலமாகும். இது இருண்ட காலமான களப்பிரர் ஆட்சிக் காலத்தின் உடனடிப் பின்னாய்த் தொடர்வது.
வள்ளுவன் வளையுமிடங்களெல்லாம் காலத்தின் அழுத்தத்தை அவன் மீற முடியாத தருணங்களின் விளைவேயென்பதை சுலபமாகப் புரியமுடிகிறது.
அதை ஒப்புக்கொள்ளுவதிலும் பெரிதான நட்டமில்லை.
குறள் அத்தகு குறைகளோடும்தான் நிமிர்ந்து நிற்க வல்லது என்பதில் எனக்கு நிறைய நம்பிக்கையிருக்கிறது.



(24)

இலர் பலராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்
( அறம், துறவு, தவம் 10 ) குறள் 270

வறியவர் பலராய் இவ்வுலகத்தில் இருக்கக் காரணம் அவர்கள் தவம் செய்யாதவர்களாயிருப்பதே ஆகும்.


வள்ளுவனுக்குத் தெரிந்த உலகம் அக்காலத் தமிழகமாகவே இருந்திருக்க முடியும். அதுவல்ல முழு உலகம் என்பதும் அவனுக்குத் தெரிந்திராததல்ல. பிரபஞ்சம்பற்றியே தெரிந்துமிருப்பான்.
இருந்தும்தான் வறுமையில் வாடுகிறவர்கள் பலராயிருக்கிறார்களென்று தீர்மானித்துவிடுகிறான்.

ஏப்படி இது கூடிற்று?

தன் கண்கண்ட உலகத்து வறுமையை எந்த அளவுகோலால் அளந்தால் சரியாக வருமென்றுதான் வள்ளுவன் முதலில் பார்த்திருப்பான்.
இல்வாழ்வார் பலரின் ஒழுக்ககீனங்களும் அவன் கண்ணில் பட்டிருக்கும்.
துறவியரில் பலரின் ஒழுக்கத்தையும் கவனித்திருப்பான்.
உடனேயே தீர்வை அடைந்துவிட்டிருக்கிறான்.

அந்தக் காலத்திலே வேலை இருந்தது@ உழைப்பு இருக்கவில்லை. வறட்சி அல்லது வெள்ளப்பெருக்கென்று ஒரு புரள்வு மாறிமாறி ஏற்பட்டு பஞ்சம் தலைவிரித்தாடக்கூடிய வாய்ப்பிருந்ததாயும் கொள்ளமுடியும்.
அதனால்தான் உழைப்பு இல்லாமல்போனது. அரசனுக்காக வேலை, ஆண்டைக்காக வேலை, கோயிலுக்காக வேலையென்று நிறைய வேலைகள் சாதாரணனுக்கு. அதன்மூலமே அவன் தன்னதும் தன் குடும்பத்தினதும் உந்திகளைக் கழுவிக்கொள்ள முடிந்திருந்தான். உழைப்பில்லாததால் வளமாக வாழவோ, வாழ வேண்டிய விதத்தில் வாழவோ அவனால் முடியாது போயிருக்கும். அவன் வாழ்வு கெட்டழிந்தது அல்லது கெட்டழிந்ததாய்த் தோன்றியது இவ்வண்ணம்தான் ரூபம் காட்டிற்று.

வேலை, உழைப்பு என்ற இரண்டையும்பற்றிய வரையறையை இங்கே சிறிது கவனிக்கவேண்டியது அவசியமெனப்படுகிறது. வேலையென்பது தான் வாழ்தலுக்கு ஆதாரமான வரும்படிக்கானது. உழைப்பு என்பது தொழில். தன் இருத்தலின் நியாயத்தோடு சம்பந்தப்பட்டது. அதனால்தான் ‘நமக்குத் தொழில் கவிதை’ என்றான் பாரதி. ஆனால் நடைமுறைப் பேச்சில் நாம் வேலை, உழைப்பு, தொழில் எல்லாவற்றையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பி வைத்துக்கொண்டிருக்கிறோம்.

அது போகட்டும்.

இப்படி வேலையையும் உழைப்பையும் வேறுபடுத்திப் பார்க்க அக்கால சமூகத்தில் தெளிவும், சித்தாந்த வரையறைவுகளும் இருந்திருக்காது.
கார்ல் மார்க்ஸ் பிறந்ததற்குப் பின்னான காலமில்லையே அது!
அதனால் காட்சிகளின் ஆதாரத்தில் வள்ளுவன் கொண்டதே, ‘தவஞ்செய்யாதபடியாலேயே பலர் வறியவர்களாக இருக்கிறார்க’ளென்ற பிழையான தீர்மானம்.



(25)

பற்றற்றோம் என்பார் படிற்றொழுக்கம் எற்றெற்றென்று
ஏதம் பலவும் தரும்
(அறம், துறவு, கூடாவொழுக்கம் 5) குறள் 275

பற்றில்லாதவர் என்று சொல்லிக்கொண்டு அப் பற்றுக்களைக் களவில் கொண்டொழுகுவார், என்ன செய்தோம் என்ன செய்தோமென்று புலம்பி வருந்தும்படியான துன்பங்களை அடைவர்.


‘படிற்றொழுக்கம்’ என்பது களவில் பூண்டொழுகும் ஒழுக்கம்.
பெரும்பாலும் இதையே கூடாவொழுக்கமென்று வரையறை செய்கிறான் வள்ளுவன்.

இனிவரும் அதிகாரங்களில்தான் நல்ல - கெட்ட ஒழுக்கங்களைப்பற்றி விரிவாகப் பேசப்போகிறானாதலின், கூடாவொழுக்கமென்ற இந்த அதிகாரத்தில் இதற்கு முந்திய அதிகாரமான ‘தவ’ த்தின் நீட்சியாகவே கருத்துக்கள் வெளியிடப்படுவதாய்க் கொள்ளவேண்டும்.

தவத்தின் வலிவு பெரிது. கூற்றம் குதித்தலும், வேண்டிய வேண்டியாங்கு எய்தலும், ஒன்னாரைத் தெறலும், உவந்தாரை ஆக்கலும் கைகூடுவதால், தவம் பலராலும் முயலப்படுகிறது. சிலர் தவ முயற்சி பலிதமாகாமலோ அல்லது முயலாமலோகூட, வேடத்தினை மட்டும் புனைந்துகொண்டு, மோசத்தில் ஈடுபட்டிருப்பர். அதைத் தவறென்று காட்டுவதே இவ்வதிகாரத்தின் நோக்கமென்று தெரிகிறது.

வானளாவிய தவவேடத்தால் ஒருவனுக்குப் பலனில்லை@ பசு புலியின் தோலைப் போர்த்திக்கொண்டு களவு செய்தாற்போன்றது, உண்மையில் தவசியில்லாதவன் தவ வேடம் பூண்டொழுகுவது@ அது வேடுவன் புதரில் மறைந்துநின்று புள்ளினை வீழ்த்துவதற்குச் சமமானது@ இதனால் துன்பம்தவிர வேறு வராது.

இதைத்தான் இவ்வதிகாரத்தின் குறள்கள் மொத்தமும் கூறுவதாய்க் கொள்ளலாம்.

000

Comments

Popular posts from this blog

ஈழத்து நாவல் இலக்கியத்தின் தோற்றம், வளர்ச்சி, போக்குகள் குறித்து...

ஈழத்துக் கவிதை மரபு:

தமிழ் நாவல் இலக்கியம்